×

சின்ன மம்மி பக்கம் திடீர் பாசத்தை காட்டும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தொழில்நுட்ப ரீதியில் மாமூல் என காதில் விழுகிறதே.. என்னா விஷயம்..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் காக்கிகளுக்குள்ளே மாமூல் விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளதாம். இம்மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு மது போதையை சோதனை செய்யும் கருவி, அபராதம் விதிக்கும் கருவி மற்றும் சிசிடிவி கேமரா, தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படுவதும், பழுது பார்ப்பதும் எஸ்பி அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவு இன்சு பொறுப்பில்தான் இருக்கிறதாம். ஓராண்டுகளுக்கு மேலாக உள்ள தொழில்நுட்ப பிரிவில் இன்சாக உள்ளவர், காக்கி துறை அதிகாரிகளிடமே மாமூலை கறக்கிறாராம்.

மது போதையை கண்டறியும் கருவி, அபராதம் விதிக்கும் கருவி அவ்வப்போது கீழே விழுந்து சேதம் ஏற்பட்டு காவல் நிலையங்களில் இருந்து போலீசார் கொடுத்தால் வாரண்ட் பில் இருந்தும், இதற்கு தனி செலவு தொகையை கேட்டு ஸ்டேஷன் போலீசாரிடம் வசூலிக்கிறாராம். அது மட்டுமா சிசிடிவி கேமரா, கணினி உள்ளிட்ட எந்த மென்பொருள் கருவிகள் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் 10% கமிஷனை அவருக்கு கொடுத்துவிட வேண்டுமாம். மேலும் அவர் சொல்லும் நிறுவனத்திடம் தான் புதிய கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டுமாம். கேட்டால் காவல் நிலையத்தில் நியாயமாக நடக்கிறதா, நீங்கள் கமிஷன் வாங்காமல் இருக்கிறீர்களா என்று தொழில்நுட்ப பிரிவு இன்சு வெளிப்படையாகவே காவல்நிலைய போலீசாரிடம் கேட்கிறாராம்.

இது குறித்து ஏற்கனவே இருந்த எஸ்பியிடம் முறையிட விசாரணை குழு அமைத்து, பத்து மாதம் வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சரித்த பிறகு அமைதியாக இருந்த தொழில்நுட்ப பிரிவு இன்சு மீண்டும் புதிய எஸ்பி பொறுப்பேற்றவுடன் மாமூல் வேட்டை ஆரம்பித்திருக்கிறாராம். காக்கித் துறையினரிடையே ஏற்பட்டுள்ள மாமூல் வேட்டையை நிறுத்தப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘சின்ன மம்மிய அம்மா அம்மான்னு சொல்லி அதிர வச்சாராமே சேலத்துக்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் புதுத்தலைவருக்கு பதவி கிடைக்கும் போதுதெல்லாம் சொந்த ஊருக்கு போய் இயற்கையோட அமர்ந்திருப்பாராம். அப்படித்தான் தேனிக்காரரின் மனு தள்ளுபடியான நேரத்தில் அங்கிருந்தாரு.

அப்போது ரொம்பவும் மகிழ்ச்சியை பகிர்ந்திக்கிட்டிருந்த நேரத்துல, திடீரென மம்மி வீட்டுல கொள்ளையடிச்சவர் அவரோட டிரைவரே இல்லை. இனிமேல் மம்மியோட டிரைவர் என சொன்னால் வழக்குபோடுவேன்னு கோபம் கொப்பளிக்கச் சொன்னாராம். பேச்சோடு பேச்சா சிறைப்பறவையான சின்னமம்மியை அம்மான்னு ரெண்டு தரம் சொன்னாராம். அதுவும் முகமலர்ச்சி யோட சொன்னாராம். இதனை கேட்டுக்கிட்டிருந்த ரத்தத்தின் ரத்தங்களே ரொம்பவும் ஷாக்காயிட்டாங்களாம். வழக்கமா சின்ன மம்மின்னாலே தலைவருக்கு தலைக்குமேல கோபம் வரும். ஆனா கட்சியின் தலைவர் பொறுப்பு வந்திட்டதால சாந்தமாகிட்டாருபோல. கூவத்தூரில் தனக்கு நாட்டை ஆளும் பதவியை கொடுத்த பாசம் இருக்கத்தானே செய்யும்.

இதனாலதான் இந்த திடீர் பாசம். அதே நேரத்துல மம்மியின் டிரைவர் இல்லன்னு சொன்ன தலைவரு, கொடநாடு கொலை கொள்ளையில் தனக்கு தொடர்பே கிடையாதுன்னு அடிச்சி சொல்ல மறுக்கிறாரேன்னு அவரது அடிப்பொடிகள் மூக்கின்மேல் விரலை வைக்கிறாங்க. ஆனா அம்மான்னு சொன்னதிலே எங்களுக்கு எந்த ஷாக்கும் இல்ல. ஏன்னா நடிகர் திலகத்தையே அவர் மிஞ்சிடுவாருன்னு சின்ன மம்மியோட சுத்த விசுவாசிகள் சொல்றாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொழிற்சங்க பிரச்னை என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை நந்தனத்தில் உள்ள பொது விநியோக திட்ட அதிகாரி ஒருவரைப் பார்த்து தங்கள் குறைகளை தெரிவிக்க ரேஷன் கடை தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை நேரம் கேட்டிருந்தனர். 10 பேர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஜே.எம்.எஸ்., அம்பேத்கர் தொழிற்சங்கம், ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் சென்றிருந்தனர்.

ஆனால் திடீரென 10 பேரை சந்திக்க முடியாது, 5 பேரை மட்டுமே சந்திக்க முடியும் என்று அதிகாரி தெரிவித்து விட்டாராம். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் அவரை சந்திக்காமல், தங்கள் கோரிக்கைகளை அங்கிருந்த தபால் செக்‌ஷனில் வழங்கி விட்டனர். மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த தொழிற்சங்க பிரதிநிதிகளையும் சந்திக்காமல் அரசுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் எதிராக செயல்படும் அதிகாரியை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ரேஷன் கடை ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனராம். அதற்கான கடிதமும் அரசுக்கு வழங்கப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரரை பொளந்து எடுத்துட்டாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இலை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அது மட்டுமல்லாது வழக்கு தொடர்ந்த தேனிக்காரரை தங்கள் பங்குக்கு பின்னி எடுத்து விட்டனர்.

அதாவது, தேனிக்காரர் தர்மயுத்தம் நடத்திய போது கூவத்தூருக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் சென்ற பஸ்சில் இருந்து இறங்கி ஓடிச் சென்று முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர், முத்து மாவட்டத்தின் முருகன் பெயரைக் கொண்டி மாவட்ட செயலாளர். தற்போது அவர் சேலம்காரர் அணியின் முக்கிய அங்கமாகி விட்டார். அவர் தேனிக்காரரை ஒரு பிடி பிடித்து விட்டார். தேனிக்காரர் இப்போது, தனி மரம் என்று கூறியதுடன் தனி மரம் தோப்பாகாது, அவருடன் 4 பேர் மட்டுமே உள்ளனர். இலை கட்சியின் கொடி, கரை வேட்டியை கூட தேனிக்காரர் பயன்படுத்தக் கூடாது. அவர் விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என ஒரு பிடி பிடித்து விட்டார். அவரது வாய்சை கேட்டு உடன் இருந்தவர்களும் கை தட்டி சிரித்துள்ளனர். மம்மி இருந்த போது பவர்புல்லாக இருந்தவர் இன்று இப்படி விமர்சிக்கும் அளவிற்கு டம்மி பீசாகி விட்டார் என்கின்றனர் இலை கட்சியினர்’’ என்றார் விக்கியானந்தா.

The post சின்ன மம்மி பக்கம் திடீர் பாசத்தை காட்டும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Saletukkar ,Peter ,Puran ,Saletakshan ,wiki ,Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...